தூத்துக்குடி மாணவி சோபியா தந்தையுடன் மனித உரிமை ஆணையத்தில் ஆஜர்

நெல்லையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு  மாணவி சோபியா மற்றும் அவருடைய தந்தை ஆஜராகினர்.
தூத்துக்குடி கந்தன் காலனியை சேர்ந்த கனடா ஆராய்ச்சி மாணவி சோபியா கடந்த 3-ந் தேதி விமானம் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்தார். அதே விமானத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் வந்தார். அப்போது விமானத்தில் வைத்து பா.ஜ.க.வுக்கு எதிராக சோபியா கோ‌ஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சோபியாவுக்கும், தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சோபியாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் சோபியாவின் தந்தை டாக்டர் சாமி மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘பா.ஜ.க. கட்சியினர் அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்ததாகவும், போலீசார் பலமணி நேரம் விசாரணை என்ற பெயரில் போலீஸ் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்ததாகவும்’ கூறியிருந்தார்.
இதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஆணையம் நெல்லையில் நடைபெறும் மனித உரிமை ஆணையத்தின் முன்பு விசாரணைக்கு ஆஜராகும் படி மாணவி சோபியா மற்றும் அவரது தந்தை சாமி, புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் திருமலை ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அதன் பேரில் மாணவி சோபியா, அவரது தந்தை டாக்டர் சாமி ஆகியோர் நெல்லையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று ஆஜராகி விளக்கம் அளித்தனர். மேலும் அவர்கள் தங்கள் தரப்பு வாதங்களை மனுக்களாகவும் தாக்கல் செய்தனர்.
இன்ஸ்பெக்டர் திருமால் இன்று காலை ஆஜராகவில்லை. மாணவி சோபியா தனது தந்தையுடன் ஆஜராக வந்ததால் அரசு சுற்றுலா மாளிகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
வள்ளியூர் பகுதியில் ஏராளமான கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பத்திரிகைகளில் சுட்டிக் காட்டப்பட்டது. இது தொடர்பாக மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும், ஏற்கனவே மனித உரிமை ஆணையத்தில் விசாரணை நடந்து பல்வேறு வழக்குகளில் கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்யாததால் இது தொடர்பாகவும் விளக்கம் அளிக்க அவர்களுக்கு சம்மன் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், போலீஸ் கமி‌ஷனருக்கு பதிலாக துணை கமி‌ஷனர் சுகுணா சிங் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் பழைய வழக்குகளின் அறிக்கையை விரைவில் தாக்கல் செய்வதாக கூறினர். மேலும் வள்ளியூர் பகுதியில் கொட்டப்படும் கழிவுகளை தடுக்க என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினர்.
Please follow and like us:

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*