ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை: தமிழிசையிடம் பெண் ஊழியர்கள் மனு

தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனிடம் பெண் ஊழியர்கள் மனு அளித்தனர்.
இது தொடர்பாக அவரக்ள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது : ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு, தூத்துக்குடியில் தற்போது நிலவும் சூழ்நிலையை தங்களுக்கு எடுத்துரைக்க கனத்த இதயத்துடன் இந்த கடிதத்தை எழுதுகிறோம். எங்களில் பலர் பாரதி பிறந்த இந்த தூத்துக்குடி மண்ணில் பிறந்து, இங்கேயே கல்வி கற்று, ஸ்டெர்லைட் ஆலையில் பல்வேறு துறையில் பணிபுரியும் ஊழியர்கள். எங்கள் ஆலையில் சுமார் 1000 பேர் நேரடி ஊழியர்களாக பணிபுரிந்து வருகிறோம். இதில் 12 % பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறோம். எங்கள் ஆலையில் பெண்கள் பல்வேறு துறைகளில் சிறந்த தலைவர்களாவும் தொழில்நுட்ப வல்லுநர்களாக பணிபுரிந்து வருகிறோம்.
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இழப்பு இல்லை”
என்ற பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப வேதாந்தா நிறுவனம் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து பெண்களின் முன்னேற்றத்திற்கு அயராது உழைத்து வருகிறது. தமிழகத்தில் வேறு எந்த உற்பத்தி தொழிற்சாலையில் இல்லாத அளவுக்கு பெண் ஊழியர்கள் எங்கள் ஆலையில் பணிபுரிந்து வருகிறார்கள். இதுவே இதற்கு சிறந்த உதாரணம். இது மட்டுமல்லாது, எங்கள் குழுமத் தலைவர் அவர்களின் நோக்கத்தின் படி இதை 30 % மாக உயர்த்த அனைத்து வித முயற்சிகளையும் எங்கள் நிறுவனம் செய்து வருகிறது.
நாங்கள் அனைவரும் சிறந்த குடும்ப தலைவிகளாகவும் திகழ்ந்து எங்கள் குடும்ப வளர்ச்சியிலும் பங்களித்து வருகிறோம். மேலும் பலரது குடும்ப வாழ்வாதாரம் இந்த ஆலையை நம்பியே உள்ளது. எங்கள் ஆலையில், பல்வேறு பெண் ஊழியர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலும் பணிபுரிந்து வருகிறோம். நாங்கள் நல்ல உடல் நலத்தோடு இருக்கிறோம். இந்த ஆலையை மூடியதால் தூத்துக்குடியில் வாழும் பல்வேறு துறையை சார்ந்த மக்களும் மிகவும் பாதிக்கபட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் 3000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மேலும், பல ஒப்பந்த உரிமையாளர்களின் முதலீடு, தமிழக அரசின் முடிவான ஸ்டெர்லைட் ஆலை மூடலால் முடங்கியுள்ளது. இது மேலும் பல ஆண்டுகளாக இந்த நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் சேவை வழங்குவோர்களையும் கடுமையாக பாதித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட எல்லை பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு உதவி, கிராமங்களில் உள்ள மக்களுக்கு மருத்துவ உதவி, தூத்துக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கட்டமைப்பு மேம்படுத்துதல், தூத்துக்குடியிலுள்ள ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குதல் போன்ற பல்வேறு சமுதாய வளர்ச்சிப்பணிகளை ஸ்டெர்லைட் நிறுவனம் மேற்கொண்டு வந்துள்ளது. இந்த ஆலை மூடப்பட்டதால் இந்த சமூக வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்துறையை சாராத கிராம மக்கள்,விவசாயிகள் மற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் ஆலை மூடல் நடவடிக்கையின் காரணமாக மொத்தம் 80000க்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட சமூக பொருளாதார தாக்கத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டில் மாற்றம் வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். மேலும் பல அந்நிய சக்திகள் மக்களின் இடையே ஊடுருவி அவர்களின் உணர்ச்சியைத் தூண்டியும் தவறான பாதையில் வழி நடத்தியும் உள்ளனர். இதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய நேரத்தில் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டனர் .ஆலையின் செயல் முறையில் எவ்வித குறையுமில்லை என்பது 22 ஆண்டுகளாக அதில் பணிபுரியும் எங்களின் தாழ்மையான கருத்து. தவறான வதந்திகளால் தொடங்கப்பட்ட ஆலைக்கு எதிராக இந்த போராட்டம், இயங்கிக் கொண்டிருந்த ஆலையையும் மூடி 80,000 மக்களின் வாழ்வாதாரத்தையும், விலை மதிப்பற்ற 13 உயிர்களையும் பலிவாங்கியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை மூடிய பிறகு, வறுமை கோட்டிற்கு கீழுள்ள அடித்தட்டு மக்கள் தங்கள் அன்றாட வாழ்வை நடத்தவே பெரும் பாடுபடுகின்றனர். இன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடுகிறவர்கள் ஆலை மூடலினால் ஏற்படும் பெரும் பொருளாதார பாதிப்பை அறியாமல் தங்களின் ஒரே சுயலாபத்திற்காக மட்டுமே போராடுகின்றனர். பொது ஊடகங்களின் மூலம், இந்த ஆலை மத்திய மற்றும் மாநில விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்குகிறது என்பதற்கு எங்கள் நிர்வாகம் தரும் விளக்கங்களையும் நன்கு உணர முடிகின்றது. ஆதலால், எங்கள் கோரிக்கை மனுவை ஏற்று ஆலையை மீண்டும் திறக்க வழிவகை செய்து 80,000 மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Please follow and like us:

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*