ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் : தூத்துக்குடியில் அர்ஜுன் சம்பத் பேட்டி

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும், இந்த பிரச்சனையை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும் என இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.

தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி மாநிலதலைவர் அர்ஜுன்சம்பத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 144 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு பல லட்சம் மக்கள் வருவார்கள் என்று தெரிந்தும் அரசும், அறநிலைத்துறையும் ஒத்துழைக்கவில்லை. போக்குவரத்து வசதி ரயில்வசதி பெண்கள் உடை மாற்றும் அறைகள் எல்லாம் சரி செய்து தரப்படவில்லை.

18 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் கூவத்தூர் கலாச்சாரம் தொடர்கிறது. இதனால் குதிரை பேரம் விரைவாக ஆரம்பிக்கும். இதற்கு மாற்று அரசியல் கண்டிப்பாக வரவேண்டும். அதிமுக – திமுக இருக்கும் வரை இது போன்ற அரசியல் நடக்கும். இதற்காகத்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் ஆரம்பித்திருக்கிறார். ஆன்மீக அரசியல் கண்டிப்பாக வெற்றி பெறும். 26ம் தேதி சென்னையில் மீ டூ விவகாரம் குறித்து கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

பாலியல் விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். அது பொய்யென்றால் புகார் அளித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை இதுபோன்ற விஷயங்களில் அரசு ஈடுபட வேண்டும். ஹெச்.ராஜா மீது தொடர்ந்து மீம்ஸ் மூலம் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. ஜெயக்குமார் மீது புகார் கூறப்பட்டதால் அவர் பதவி விலக வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளதால் தூத்துக்குடி மக்களின் தொழில், வாழ்வாதாரம் , அமைதி பாதிக்கப்பட்டுள்ளது.

ஆலை மூடப்பட்டுள்ளதால் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி சின்ன கடைகளில் கூட வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே நக்சலைட்டுகள் சிலர் பொய் பிரச்சாரம் செய்துள்ளனர். அவர்களுக்கு பயந்து கொண்டு ஆலையை மூடக்கூடாது. உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும். இதை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும் என்றார்.

Please follow and like us:

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*